(29) என்னை நினைவுபடுத்தும் பாடல்!
"படிக்காத மேதை'யில் சிவாஜிகணேசன் என்கின்ற நடிப்பு மேதையுடன் நடித்தபோது என்னுடைய நடிப்பு மேலும் பிரகாசமானது. அதனால் என் நடிப்பு பெரும் வரவேற்பு பெற்றது. குடும்பப் பாங்கான வேடங்கள் என்னைத்தேடி வரத்தொடங்கியது. இந்தப் படத்திலும் என்னை நினைவில் வைக்கும் ஒரு பாடலை கவியரசு கண்ணதாசன் எழுதியிருந்தார்.
"படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு' என்ற பாடல்தான் அது.
1961 எனக்கு கூடுதல் பிரகாசமான ஆண்டாக அமைந்தது. இந்த வருடத்திலும் நான் நான்கு படங்களின் கதைநாயகியாக பேசப்பட்டேன், வரவேற்பு பெற்றேன்.
"மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை… காரணம் ஏன் தோழி…
காரணம் ஏன் தோழி...…'…
என்கின்ற பாடல் இன்றைக்கும் இந்தத் தலைமுறையை ரசிக்க வைக்கின்றது. இரவின் மடியில் மனதை தாலாட்டும் பாடலாக சென்னை வானொலியில், எப்.எம். ரேடியோவில் சின்னத்திரையில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. கவலை மறந்து மற்றவர்களை தூங்க வைக்கும் பாடலாக அது அமைந்தது. பல மில்லியன் நேயர்கள் இந்தப் பாடலைக் கேட்டு ரசித்ததாகச் சொல்கிறார்கள். பி.சுசீலா பாடிய இந்தப் பாடலுக்கு வாயசைத்து, அபிநயித் தது நான்தான். "பாக்கியலட்சுமி' என்கின்ற படத் தில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில், ஒரு இளம் விதவையான பெண்ணின் உணர்வை பிரதிபலிக்கும் வேடத்தில் நான் நடித்த படம் அது.
இந்தப் படத்தில் இன்னொரு பாடல்...
"காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே
கண்டுவிட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
ஓடி வந்த வேகமென்ன வெள்ளி நிலவே
நீ ஓரிடத்தில் நிற்பது ஏன் வெள்ளி நிலவே'
என்கின்ற அந்தப் பாடல்.
கவியரசர் கண்ணதாசன் இந்த இரண்டு பாடல்களையும் எழுதியிருந்தார். இந்த இரண்டு பாடல்களிலும் ஒரு பெண்ணின் உணர்வை மிக அற்புதமாக சொல்லியிருந் தார். இரண்டாவது பாடலில் ஒரு பெண்ணை நிலவோடு ஒப்பிட்டு அந்தக் கதாபாத்திரத்தை அழகாக எழுதியிருந்தார் கண்ணதாசன். சுசீலா மிகச்சிறப்பாக பாடியிருந்தார். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் -ராமமூர்த்தி இந்தப் பாடல்களுக்கு இசையமைத்திருந்தார்கள்.
ஜெமினிகணேசன், நான் (சௌகார் ஜானகி) ஈ.வி.சரோஜா, கண்ணாம்பா, தங்கவேலு, எம்.சரோஜா, சி.கே. சரஸ்வதி ஆகியோர் நடித்திருந் தோம். 1943-ல் தெலுங்கில் நாகையா, மாலதி நடிப்பில் வந்த படத்தின் கதையை தழுவித்தான் பாக்கிய லட்சுமி உருவானது.
மியூசிக் டீச்சர் ஸ்ரீனிவாச ராவ் (நாகையா) பாக்கியலட்சுமியை (மாலதி) காதலிக்கிறார். ஆனால் பாக்கியலட்சுமியின் பெற்றோர் அவளை வேறொருவருக்கு மணம் முடித்து கொடுத்து விடுகிறார்கள். மணம் முடித்து சென்ற இடத்திலும் அவளுக்கு நிம்மதி இல்லை. யாரோ ஒரு பெண் வதந்தியை கிளப்பி விட, அதை நம்பி அவளுடைய கணவன் அவளை வீட்டைவிட்டு வெளியேற்றிவிடுகிறான். இறுதியில் அவளுடைய காதலன் மியூசிக் டீச்சர் ஸ்ரீனிவாசராவ், பாக்கியலட்சுமி யையும், அவளது கணவரையும் சேர்த்து வைக்கிறார். இதுதான் தெலுங்கு படத்தின் கதை.
ஆனால் தமிழில் வந்த பாக்கிய லட்சுமி, இன்னும் சில கதாபாத்திரங்கள் சேர்த்து நகைச்சுவை ததும்ப தமிழுக்கு ஏற்ப சில மாற்றங்களோடு வெளியாகி வெற்றிபெற்றது. தன்னைத் தேடி தன்னு டைய பால்ய கணவர் வருவார் என்று கமலா காத்திருக்கிறாள். தன் தோழியின் காதல் கணவன்தான் தனது பால்ய விவாக கணவர் என்பது தெரிந்து திகைத்துப் போகி றாள் கமலா. கமலாவாக நானும், எனது தோழியாக ஈ.வி.சரோஜாவும் நடித்தோம். இந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதிய அமரர் கல்கி அவர்கள் எனது நடிப்பை பாராட்டியும், படத்தின் பாடல்களை ரசித்தும் பாராட்டி யிருந்தார். பாக்கியலட்சுமி இன்று வரையும் பெண்கள் மத்தியில் பேசப்படும் ஒரு படமாக இருந்து வருகிறது. கே.வி.சீனிவாசராவ் இயக்கினார். எனக்கு பெருமை சேர்த்த படம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/22/sowcarjanaki1-2026-01-22-16-37-21.jpg)
அடுத்து "குமுதம்'. இந்த படத்தில் ஒரு பார்வையில்லாத பெண் ணின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வேடம் எனக்கு. லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். எனக்கு ஜோடியாக நடித்தார். அவருடைய வசன உச்சரிப்பு தெளிவாக கணீரென்று இருக்கும். இந்தப் படத்தில் கவியரசர் கண்ணதாசன் எனக்காக இரண்டு பாடல்களை எழுதியிருந்தார்.
"கல்லிலே கலை வண்ணம் கண்டான் -இரு
கண் பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்'
என்கின்ற அந்தப் பாடலை மகாபலி புரத்தில் படமாக்கினார்கள். அப்போதுதான் நான் முதல்முறையாக மகாபலிபுரத்தை நேரில் சென்று பார்த்தேன். அந்தச் சிற்பங்களைக் கண்டு வியந்துபோனேன். கல்லில் இத்தனை அழகாக கண்ணைக் கருத்தைக் கவரும் விதமாக வடித்திருந்த ஒவ்வொரு சிற்பமும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அங்குள்ள அந்த கலங்கரை விளக்கத்தின் மீது ஏறி நின்று, கடலையும் அந்த அழகிய சிற்பங்கள் நிறைந்த பிரதேசத்தையும் பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது. பல்லவ மன்னனின் ரசனையைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.
என்னை நினைவுபடுத்தும் வகையில் இன்னொரு பாடல் .
"மியாவ் மியாவ் பூனைக்குட்டி!
வீட்டைச் சுற்றும் பூனைக்குட்டி
அத்தான் மனசு வெல்லக்கட்டி
அவர் அழகைச் சொல்லடி செல்லக்குட்டி'
ஒரு பார்வை இல்லாத பெண் தன் கணவன் மீதான நேசத்தைச் சொல்லும் விதமாக பாடல் அமைந்தது. அந்தக் காலத்தில் இந்தப் பாடல்கள் திரும்பிய பக்கமெல்லாம் ஒலித்தது. அது மட்டுமல்ல இந்தப் படத்தில் ஒரு துள்ளல் பாடல். இப்போது கேட்டாலும் ஆட வைக்கும் பாடல். "மாமா மாமா மாமா ஏம்மா ஏம்மா' என்ற பாடலுக்கு எம்.ஆர்.ராதா துள்ளலாக டான்ஸ் ஆடினார்.
"குமுதம்' படம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. விஜயகுமாரி, எஸ்.எஸ்.ஆர்., எங்கள் நடிப்பு, பெண்கள் மத்தியில் பேசப்பட்டது. "குமுதம்' 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிபெற்றது, அதுமட்டுமல்ல, இந்த படம் தெலுங்கில் "மஞ்சி மனசுலு' (1962) என்றும், மலையாளத்தில் 1963ல் "சுசீலா' என்றும், இந்தியில் 1964ல் "பூஜா கே பூல்' என்றும் வெளி யானது.
அடுத்து "ப' வரிசை டைரக் டர் பீம்சிங் அவர்களின் "பாலும் பழமும் ' படத் தில் சிவாஜியின் முறைப் பெண் ணாக அவரை ஒரு தலையாய் நேசிக்கும் வேடம் எனக்கு. என் குணச்சித்திர நடிப்பு பேசப்பட்டது. இதுவும் குடும்பங்கள் கொண்டாடிய படம்.
1962, 63ஆம் ஆண்டுகள் எனக்கு ஏறுமுகமா....?
(பேசுறேன்...)
படம் உதவி: ஞானம்
______________________________________
திரைப்படங்களில் நடித்து வந்த நான் சின்னத்திரையிலும் நடித்திருக்கின்றேன்.
அப்படி நான் நடித்தவை...
1991ல் டி.டி.தமிழில் "ஊரறிந்த ரகசியம்'
1995ல் "நீடா' தெலுங்கு
1998ல் "அக்ஷயா' தமிழ்.
2001-2002ல் "கேளுங்கள் மாமியாரே நீங்களும் மருமகள்தான்' (சன் டிவி.)
2013ல் வருதினி (தெலுங்கு)
2014ல் பரிணயம் தெலுங்கு (ஜீ டி.வி.)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/22/sowcarjanaki-2026-01-22-16-37-11.jpg)